Skip to main content

டிச.01 முதல் சுங்கச்சாவடிகளை கடக்க இது கட்டாயம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை!

இந்தியா:

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 46 கி.மீ தூர இடைவெளியில் டோல்பிளாசாக்கள் அமைக்கப்பட்டு வாகனங்களிடம் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. இதன் மூலம் தேசிய நெடுஞ்சாலைகளின் பராமரிப்புப்பணி மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு கொண்டு வந்தது. அன்று முதல் டிஜிட்டல் பணபரிமாற்றத்துக்கு மக்களை மாற்றிட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக தமிழகம் உட்பட நாடு முழுவதும் குறிப்பிட்ட சில டோல்பிளாசாக்களில் பாஸ்ட்டேக் மின்னணு அட்டை மூலம் கட்டணம் செலுத்தும் முறை பரிசோதனை முறையில் நடைமுறைக்கு வந்தது.

இதன் வெற்றியை தொடர்ந்து வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் உள்ள டோல்பிளாசாக்களில் இம்முறையை கட்டாயமாக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

நாடு முழுவதும் 414 சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் தமிழகம் உட்பட நாடு முழுவதும் குறிப்பிட்ட சில டோல்பிளாசாக்களில் கடந்த 2016ம் ஆண்டே பாஸ்ட்டேக் மின்னணு அட்டை பொருத்தப்பட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இது ரேடியோ அதிர்வெண் அடையாள தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இதற்காக வாகன உரிமையாளர்களுக்கு பின்வரும் வங்கிகளால் வாகன எண்ணுடன் வழங்கப்படும் பாஸ்ட்டேக், வாகன முகப்பு கண்ணாடியில் ஒட்டப்படும்.

இதனுடன் டோல்பிளாசாக்கள் அருகில் 20 முதல் 25 மீட்டருக்குள் வாகனங்கள் வரும்போது அங்கு பொருத்தப்பட்டுள்ள ரேடியோ அதிர்வெண் அடையாள தொழில்நுட்ப சாதனம், வாகன பாஸ்ட்டேக் மூலம் வாகன எண், வங்கி கணக்கு ஆகியவற்றை சில நொடிகளில் கிரகித்துக்கொள்ளும். வாகனம் சாவடிக்கு வந்ததும் அனுமதிக்கும்.

அந்த இடைவெளியில் வாகன நுழைவுக்கான கட்டணம் தானாக வங்கி கணக்கில் இருந்து கழிக்கப்படும். இதற்காக கீழ்காணும் வங்கிகளில் வாகன எண்ணுடன் வங்கி கணக்கு தொடங்கி பாஸ்ட்டேக் பெற வேண்டும்.

அதோடு வாகனங்கள் கடக்கும் தூரத்தை கணக்கிட்டு அதற்கான கட்டணம் மட்டும் கழிக்கப்படும். பாஸ்ட்டேக் வாகனங்களுக்காக டோல்பிளாசாக்களில் உள்ள 5 நுழைவு வாயில்களில் 4 ஒதுக்கப்படுகிறது. அந்த வசதியில்லாத வாகனங்களுக்கு ஒரு வழியில் மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

இந்த நடைமுறையை ஒருங்கிணைத்து நிர்வகிக்கும் பணியை IHMCL என்ற இந்தியன் ஹைவே மேனேஜ்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் மேற்கொள்கிறது. இதற்காக முதலில் ஐசிஐசிஐ, எச்டிஎப்சி, ஆக்சிஸ், தென்னிந்திய வங்கி, எஸ்பிஐ ஆகிய 5 வங்கிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடன் கை கோர்த்திருந்தன. தற்போது பேடிஎம் உட்பட மேலும் சில நிதியமைப்புகள் இணைந்துள்ளன.

பாஸ்ட்டேக் பொருத்தப்பட்ட வாகனங்கள் நாடு முழுவதும் தற்போது 21 கோடிக்கும் மேற்பட்ட வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. இதில் ஏறத்தாழ 8 லட்சம் வாகனங்கள் பாஸ்ட்டேக் மின்னணு அட்டையுடன் ஓடிக் கொண்டிருக்கின்றன. தற்போது புதிதாக உற்பத்தி செய்யப்படும் வாகனங்கள் பாஸ்ட்டேக் மின்னணு அட்டையுடனே தயாரிக்கப்படுகின்றன. படிப்படியாக அனைத்து வாகனங்களும் பாஸ்ட்டேக் திட்டத்தில் இணைக்க  நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட்டு வருகின்றன.

எம்பி, எம்எல்ஏக்களுக்கு அரசே 2 பாஸ்ட்டேக்குகளை இலவசமாக வழங்கும். இது அவர்கள் பதவியில் இருக்கும் வரை செல்லுபடியாகும். அதேபோல் அரசாங்க வாகனங்களும் ஆர்சி புத்தகத்துடன் விண்ணப்பித்து அரசிடம் இருந்து பாஸ்ட்டேக்குகளை பெற வேண்டும். இல்லாவிட்டால் பாஸ்ட்டேக் இல்லாத வாகனங்களுக்கான ஒரே நுழைவு பகுதி மூலம் நீண்ட நேரம் காத்திருக்க நேரிடும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

பாஸ்ட்டேக் மூலம் டோல்பிளாசாக்களை சுலபமாக வாகன ஓட்டிகள் கடந்து செல்வதுடன் செல்லும் தூரத்துக்கு மட்டும் கட்டணம் செலுத்தவும், குறிப்பிட்ட சதவீதம் கேஷ்பேக்கு பெறவும் வழிவகை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்நடைமுறை மூலம் ஒவ்வொரு டோல்பிளாசாவில் கடக்கும் வாகனங்களின் எண்ணிக்கை துல்லியமாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் அறியப்படுவதுடன், வாகனங்களுக்கான கட்டணம் சரியாக வசூலிக்கப்படுவதையும் கண்காணிக்க முடியும்.

அதேநேரம், எரிவாயுவின் விலையும் கனிசமாக உயர்ந்துள்ளதால் சுங்க கட்டணங்களால் சரக்குகளின் விலை ஏறி விலைவாசி உயர்வுக்கும் வழிவகை செய்கிறது. எனவே, சுங்க கட்டணத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்களிடையே நீண்ட காலமாக உள்ளது. 

Comments