Skip to main content

'மருத்துவக் கல்லூரி அமைக்க தேவையான நிலத்தினை இலவசமாக தர தயார்' நாகை மாவட்ட ஆட்சியரை சந்தித்த நீடூர் முஸ்லிம்கள்!

தமிழகம்:

அக்-24,
நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரிக்கு நாகை அருகே ஒரத்தூரில் இடம் தேர்வு செய்துள்ள நிலையில், அக்கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வேண்டுமென அப்பகுதியை சேர்ந்த பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மருத்துவக் கல்லூரி தொடங்க சுமார் 20 ஏக்கர் நிலத்தை நாகை அருகே ஒரத்தூரில் மாவட்ட நிர்வாகத்தால் இடம் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

மயிலாடுதுறை உட்கோட்டத்தில் வசிக்கும் மக்களின் நீண்டகால கனவான மருத்துவக் கல்லூரி அமைய இடம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்று கருதிய நீடூர் அரபிக்கல்லூரி நிர்வாகம் 20 ஏக்கர் நிலத்தை இலவசமாக தர முன்வந்துள்ளது.

இதுபற்றி ஜே.எம்.எச். நீடூர் அரபிக்கல்லூரி டிரஸ்ட்டின் செயலாளர் எஸ்கொயர்.சாதிக் நம்மிடம், ``நூற்றாண்டைக் கடந்த எங்கள் அரபிக்கல்லூரி சார்பாகவே மருத்துவக்கல்லூரி அமைக்க முயன்றோம். முடியவில்லை.

தற்போது அரசே தொடங்க முன்வருவதாலும், மயிலாடுதுறை அருகே போதுமான இடம் தேவைப்படுவதாலும் எங்க நிர்வாகம் தாமாகவே முன் வந்து மருத்துவக்கல்லூரி அமைய 20 ஏக்கர் இடத்தை நன்கொடையாக வழங்க முடிவெடுத்துள்ளோம். அதற்கான அனுமதி கடிதத்தை இன்று நாகை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி உள்ளோம்.

எங்கள் இடத்தை அரசு ஏற்றுக்கொண்டு இப்பகுதியில் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படுமானால் அனைத்து தரப்பு மக்களுக்கும் எங்களால் இயன்ற சிறு உதவி செய்த சந்தோஷத்தைப் பெறுவோம்" என்றார்.

மேலும், நாகைப் பகுதியை சேர்ந்த மக்கள் தலைநகரிலேயே இக்கல்லூரி அமைய வேண்டும் எனவும், அது நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைய வேண்டும் எனவும் கருதுகின்றனர்.

நாகை சட்டமன்ற உறுப்பினர் திரு.தமீம் அன்சாரியும், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு கிடைக்கவிருக்கும் மருத்துவ கல்லூரியை மாவட்ட தலைநகர் என்ற அடிப்படையில் நாகப்பட்டினத்திற்கே வழங்க ஆவணம் செய்ய வேண்டும்.

மருத்துவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள், நோயாளிகள் ஆகியோரின் நலன் மற்றும் போக்குவரத்து வசதி ஆகியவற்றை கவனத்தில் கொண்டு நாகை நகராட்சி எல்லைக்குள் அல்லது ECR சாலையையொட்டி இடத்தேர்வு அமைய வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்று இரண்டு நாட்களுக்கு முன் தமிழக முதல்வரை சந்தித்து விளக்கினார்.

இதுகுறித்து உரிய ஆலோசனை பெற்று நல்ல முடிவெடுப்பதாக தெரிவித்ததால் தான் நாகப்பட்டினம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை என்கின்றனர் விஷயம் அறிந்தவர்கள்.

Comments