Skip to main content

'அகழாய்வு' மத்திய தொல்லியல் துறை அனுமதி பெற்ற தமிழக தொல்லியல் துறை!

தமிழகம்:

தமிழ் மற்றும் தமிழர்களின் பெருமையை பறைசாற்ற பல்வேறு சங்க இலக்கியங்கள் இருக்கின்ற போதிலும் நாம் கூறுவதை மற்றவர்களும் ஏற்றுக்கொள்ள இலக்கியங்கள் பேசுகின்ற வாழ்க்கை முறையை அகழாய்வுகளின் மூலம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்க வேண்டியுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் 40 வரலாற்று முக்கியத்துவம் மிக்க இடங்களில் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அண்மைக்காலங்களில் அழகன்குளம் பட்டறைபெரும்புதூர் மற்றும் கீழடி ஆகிய தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் தமிழக அரசு ஆய்வு மேற்கொண்டது.

குறிப்பாக 2014-ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தில் 55 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்ற ஆய்வில் தமிழகத்திற்கும் ரோம நாட்டிற்கும் இடையில் வணிகத் தொடர்பு இருந்ததற்கான பொருட்கள் கிடைக்கப்பெற்றன.

சிவங்கை மாவட்டம் கீழடியில் 103 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வில் கீழடி நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது என்றும் வைகை ஆற்றங்கரையோரம் அக் காலத்திலேயே நகர நாகரிகம் தழைத்தோங்கி இருந்தது என்றும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ஆண்டுதோறும் பல்வேறு இடங்களில் தொல்லியல் கள ஆய்வு செய்வதற்கு தமிழக அரசு 2 கோடி நிதி ஒதுக்கி இருந்தது.

அதன் அடிப்படையில் தற்போது தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் மூலம் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை, ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடுமணல் சிவகங்கை மாவட்டத்திலுள்ள கீழடி ஆகிய தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறை அனுமதி  பெறப்பட்டுள்ளது.

ஆதிச்சநல்லூரைப் பொருத்தமட்டில் 1876-ம் ஆண்டு ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த டாக்டர் ஜாகோர் என்பவர் அங்குள்ள பரம்பு பகுதியில் அகழாய்வு மேற்கொண்ட போது முதுமக்கள் தாழிகளையும் எலும்புக்கூடுகளையும் வெங்கல பாத்திரங்களையும் கண்டறிந்தார்.

அதன் பின்னர் ஆதிச்சநல்லூரில் சென்னை அரசு அருங்காட்சியகத்தின் துணை கண்காணிப்பாளராக 1899-ம் ஆண்டு பணியாற்றிய அலெக்சாண்டர் ரீ என்பவர் 1902 முதல் 1904-ம் ஆண்டுகள் இல் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு தொல்லியல் பொருட்களை கண்டறிந்தார். அவை தற்போது சென்னை அரசு அருங்காட்சியகத்தில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பின்னர் 2003-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரை மத்திய தொல்லியல் துறையால் ஆதிச்சநல்லூரில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த ஆய்வு முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில் தமிழக தொல்லியல் துறை இப்பகுதியில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளவிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது

ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சென்னிமலைக்கு அருகிலுள்ள கொடுமணல் என்ற ஊரில் இந்திய தொல்லியல் துறை, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியவை 1985 முதல் 1997 வரையிலான காலப் பகுதியில் ஆறு கட்டங்களாக விரிவான ஆய்வை மேற்கொண்டனர். அங்கு அரிய கல்மணிகள் செய்யும் அமைப்பு, இரும்பு உருக்கும் அமைப்பு, உழவு தொழில் போன்ற தொழிற்கூடங்கள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்தன.

மேலும் தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புடன் கூடிய பானை ஓடுகளும் அதிகளவில் கிடைத்தன. இப்பகுதியில் மேற்கொண்டு ஆய்வுகள் நடக்கும் பட்சத்தில் பெருங்கற்கால நாகரிகத்தின் பல்வேறு கூறுகள் வெளிப்பட வாய்ப்பு உள்ளதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் அமைந்துள்ள சிவகளை என்னும் ஊரில் ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட பரம்பு பகுதியில் உள்ள தொல்லியல் மேட்டில் இரும்புக் காலத்தைச் சார்ந்த எண்ணற்ற தொல்பொருட்கள் மேற்பரப்பில் கிடைத்துள்ளன. ஆகவே ஆதிச்சநல்லூர் போன்று இப்பகுதியிலும் இரும்புக் காலத்தைச் சார்ந்த பண்பாடு இருக்கும் என்பதை அடிப்படையாகக் கொண்டு இப்பகுதி முழுவதும் அகழாய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியைப் பொறுத்தவரையில் 2014-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை மூன்று கட்டங்களாக மத்திய தொல்லியல் துறை ஆய்வு செய்தது அதில் மொத்தமாக 7818 தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில் தான் 2018 மற்றும் 19-ம் ஆண்டுகளில் தமிழக தொல்லியல் துறையானது நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட அகழாய்வை கீழடியில் மேற்கொண்டு அங்கு கிடைக்கப்பெற்ற பொருட்கள் மற்றும் கட்டுமான அமைப்புகளை அறிவியல் ரீதியாக சோதித்து அறிந்த பின்னர் கீழடி நாகரிகம் ஆனது 2600 ஆண்டுகள் பழமையானது என்றும் வைகை நதிக்கரையில் அப்போதே நகர நாகரிகம் உருவானது என்பதும் நிரூக்கப் பட்டிருந்தது.

மேற்கண்ட இடங்களில் நடைபெறும் அகழாய்வுகளின் மூலம் தமிழர்களின் தொன்மையான நாகரீகத்தை வெளிக்கொணர முடியும் என தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.

Comments