Skip to main content

மலேசியாவுடன் இந்தியா வர்த்தகப் போர் பாதிப்பு யாருக்கு?

உலகம்:

காஷ்மீருக்கு  சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370-ஐ கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டது.

இது குறித்து ஐக்கிய நாடுகள் மன்றத்தின் 74 வது பொதுச்சபை கூட்டத்தில் பேசிய மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மது, காஷ்மீர் விவகாரம் தொடர்பான ஐ.நா வின் தீர்மானம் உள்ள போதிலும், அப்பகுதி வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

மேலும், அமைதியான வழிமுறைகளின் மூலம் காஷ்மீர் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும். இல்லையெனில் ஐநாவின் கோரிக்கைகளைப் புறக்கணிப்பது என்பது சட்ட நீதியைப் புறக்கணிப்பதற்கு ஒப்பானது என்று குறிப்பிட்டிருந்தார்.

மலேசிய பிரதமரின் கருத்து இந்தியாவுக்கு கடும் அதிருப்தியை அளித்தது. இதன் தொடர்ச்சியாக மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் அளவை  குறைக்க அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. மலேசியாவுக்கு பதிலாக இந்தோனேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்ய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியாவில் இருந்து அதிகம் பாமாயிலை இறக்குமதி செய்யும் நாடுகளில் முதன்மை வகிக்கும் இந்தியா, இறக்குமதியை  நிறுத்தும் பட்சத்தில் அந்நாட்டின் வர்த்தகத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பேசப்படுகிறது.

இந்த நிலையில், இது குறித்து பேசிய மலேசிய பிரதமர் மகாதீர், காஷ்மீர் குறித்து பேசிய கருத்தை திரும்ப பெறப்போவது இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மகாதீர் முகம்மது கூறுகையில், “ நாங்கள் மனதில் இருந்து பேசுகிறோம், எனவே, எங்களின் கருத்தை திரும்பப்பெறவோ, மாற்றவோ போவது இல்லை. இந்தியத் தரப்பின் இந்த நடவடிக்கை குறித்தும், அதனால் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்தும் ஆராயப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவும் கூட பல்வேறு பொருட்களை மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்கிறது. எனவே, இது ஒரு வழி வர்த்தகம் அல்ல, இருவழி வர்த்தகம் என சுட்டிக் காட்டியுள்ளார்.

பழுத்த அரசியல்வாதியான மகாதீரின் இந்த வார்த்தைகள் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியவை என்றே கருதப்படுகிறது.

தென்கிழக்காசியாவின் முக்கிய பொருளாதார சக்தியான மலேசியாவுடன் இந்தியா வர்த்தகப் போரில் ஈடுப்படுவது ராஜத்தந்திர ரீதியில் ஆய்வுக்குட்படுத்த வேண்டியதாக கருதப்படுகிறது.

Comments