Skip to main content

குடிக்க சொல்லித் தரும் கேரள பள்ளிகள்!



இந்தியா:

தமிழகத்தில் அரசாங்கமே நடத்திவரும் 'டாஸ்மார்க்' கில் பண்டிகை தின வருமானமே பலநூறு கோடிகளை தாண்டி அகல பாதாளத்தில் தமிழர்களின் ஆரோக்கியத்தை நாளுக்கு நாள் சிதைந்து வரும் சூழலில் அது மெல்ல கல்லூரி மாணவர்களை தாண்டி பள்ளி மாணவர்கள், பெண்கள் என தனது கோரக் கரங்களை நீட்டி வருகிறது.

இந்தநிலையில் தான் கேரள பள்ளிகள் பெரும்பாலானவற்றில் மாணவ, மாணவியர் ஆரோக்கியத்தை காக்கும் பொருட்டு, நீர் மணி (வாட்டர் பெல்) முறையை கொண்டு வந்து நாளொன்றுக்கு இரண்டல்லது மூன்று முறை மணி அடிக்கப்படுகிறது. அப்போது அனைவரும் கண்டிப்பாக தண்ணீர் குடிக்க வேண்டும்.

இதுகுறித்து சம்பந்தபட்ட பள்ளிகள் கூறும்போது, வீட்டிலிருந்து பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு குடிக்க தண்ணீருடன் பள்ளிக்கு அனுப்புகிறார்கள். ஆனால், பலர் இதை குடிப்பதில்லை. போதுமான அளவு தண்ணீர் குடிக்காததால், குழந்தைகளுக்கு பல உடல்நலப் பிரச்சினைகள் உண்டாகின்றன.

எனவே, மாணவர்கள் உடல்நலத்துடன் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த முறையை அறிமுகப்படுத்தியுள்ளதாக இதனை நடைமுறைபடுத்தும் பள்ளி நிர்வாகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் சமூக ஊடகங்களின் வாயிலாக அறிந்து, தற்போது சில பள்ளிகள் இத்திட்டத்தினை செயல்படுத்துகின்றன.

மாணவர்களின் அறிவை மேம்படுத்துவதற்காக 5 ஆம் மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கும் பொதுதேர்வை கொண்டு வந்திருப்பதாக கூறும் அரசுகள் அம்மாணவர்கள் ஆரோக்கியமுடன் திகழ தேவையான நடவடிக்கை விரைந்து எடுப்பது கட்டாயமாகும்.

தமிழகம் சத்துணவுத் திட்டம் முதல் ஏராளமான மாணவர் நலத்திட்டங்களில் முதன்மை மற்றும் முன்னோடியாக திகழ்வதை போல் அவர்களின் ஆரோக்கியம் சாரந்த இதுப்போன்ற விஷயங்களை தீவிரமாக முன்னெடுக்க வேண்டும்.

தமிழக பள்ளிகளில் விடப்படும் இடைவேளை (இண்டர்வெல்) சிறுநீர் கழிப்பதற்கும், தீண்பட்டங்களை உண்பதற்கும், தாகம் எடுத்தால் நீர் அருந்துவதற்கும் என்றில்லாமல் தூய்மையான குடிநீரை கட்டாயமாக பருக, சுகாதாரமான முறையில் சிறுநீர் கழிக்க, ஆரோக்கியம் மற்றும் சத்துக்கள் நிறைந்த மண் சார்ந்த தீண்பண்டங்களை உண்ண என விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பொறுப்புணர்வு அரசாங்கம் மட்டுமின்றி நம் அனைவருக்கும் உண்டு.

Comments